அரசியல் கூத்துகள் - 2
சமீப காலத்தில் வாசித்த செய்திகளைச் சார்ந்த சில கேலிக்கூத்துகள், உங்கள் பார்வைக்கு :)
'ராமர் சேது' கூத்து:பிஜேபி மற்றும் அதிமுக, சேது சமுத்திரம் கப்பல் பாதைத் திட்டத்தை, மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றன. 'ராமர் கேது' என்றழைக்கப்படும், இராமரின் வானர சேனை கட்டிய புராதன பாலத்தின் தடங்கள் அழிந்து விடும் அபாயம் இருப்பதாகவும், அதை அழிப்பதை நாடு தழுவிய பிரச்சினை ஆக்கப் போவதாகவும் பிஜேபி கூறி வருகின்ற நிலையில், மத்திய அமைச்சர் பாலு, இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் தேசிய நலனுக்கு எதிரானவர்கள் என்று கூறியிருப்பது நல்ல நகைச்சுவை :)
அவர் சார்ந்திருக்கும் திராவிட இயக்கத்தின் அந்நாள் தலைமை, மகாத்மா காந்தி 1942-இல் வெள்ளையருக்கு எதிராக 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தைத் தொடங்கியபோது, அயல்நாட்டவரின் ஆட்சிக்கு ஆதரவாக தீர்மானத்தை நிறைவேற்றியது ! தேசிய நலனில் என்னே ஓர் அக்கறை !!!
'பாலாற்று அணை' கூத்து:இப்பிரச்சினையில் ஆளும் திமுகவின் 'வழவழா கொழகொழா' அணுகுமுறையினால், அக்கட்சி அதன் தோழமைக் கட்சிகளாலேயே (பாமக, இடதுசாரி, விசி) தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. பாமகவின் தலைவர் ஜிகே மணி அவர்கள் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில், அவரு,ம் அவரது கட்சியினரும் அணை கட்டவிருக்கும் இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டபோது, அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கி விட்டதை ஆந்திர அரசு தரப்பே ஒப்புக் கொண்டதாகக் கூறியுள்ளார் ! ஆனால், அமைச்சர் துரைமுருகனோ சட்டமன்றத்தில், அப்படியொன்றும் இல்லை என்கிறார் !
ஆந்திராவில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி ! அதனால் தான் என்னவோ, தமிழக அரசு பேச்சை விடுத்து செயலில் இறங்குவதாகத் தெரியவில்லை. மாநிலத்தில் ஆட்சியையும், மத்திய அமைச்சரவையில் பங்கையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் இல்லையா ?
'மாநகராட்சி மறுதேர்தல்' கூத்து:சென்னை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடுவது குறித்து, எதிர்க்கட்சியான அதிமுகவும், மதிமுகவும் குழப்பத்தில் உள்ளன. மறுதேர்தலை அக்கட்சிகள் புறக்கணிக்கும் பட்சத்தில், கேப்டனின் தேமுதிகவுக்கு வாய்ப்புகள் ஓரளவு பிரகாசமாகும்.
மறு தேர்தலில் பெருவெற்றி கிட்டினால் மட்டுமே, சென்ற முறை தேர்தலில் பெருவாரியாக முறைகேடு செய்து ஜெயிக்கவில்லை என்பதை, திமுக பொதுமக்களுக்கு நிரூபிக்க முடியும் என்றும், இத்தேர்தலுக்கு மீண்டும் பணம் செலவழிக்க வேண்டுமே என்றும், திமுகவின் கூட்டணிக்கு இரு பெருங்கவலைகள் உள்ளன.
அதே நேரம், அதிமுக தேர்தலை புறக்கணிப்பதில் கொண்டாட்டமே ! சமீபத்தில், சென்னை உயர்நீதி மன்றம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாநில தேர்தல் ஆணையர் பதவியில் தொடர்வதை எதிர்த்து தாக்கல் செய்த ரிட் மனுவை ஏற்று, மாநில தேர்தல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாலாற்றில் புது அணை கட்டுவதற்கான அறிவிப்பை மாநகராட்சித் தேர்தலுக்குப் பின் வெளியிடுமாறு ஆந்திர அரசை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது !!!
எ.அ.பாலா
பி.கு: இன்னும் இரண்டு கூத்துகளைப் பற்றி (காவிரி ஆணையத்தின் தீர்ப்பு மற்றும் அமைச்சர் ஆற்காட்டாரின் உயர்நீதிமன்றத்தின் மீதான கடும் விமர்சனம்) நிறைய எழுதலாம் தான் ! இப்ப ரொம்ப அயற்சியாக இருப்பதால் அப்புறம் பார்க்கலாம் ! அதான் தினம், ஒரு கூத்து பற்றிய செய்தி வந்து கொண்டு தானே இருக்கிறது ;-)
*** 293 ***
5 மறுமொழிகள்:
Test comment !
//பி.கு: இன்னும் இரண்டு கூத்துகளைப் பற்றி (காவிரி ஆணையத்தின் தீர்ப்பு மற்றும் அமைச்சர் துரைமுருகனின் உயர்நீதிமன்றத்தின் மீதான கடும் விமர்சனம்) நிறைய எழுதலாம் தான் !
//
By mistake, I have mentioned Duraimurugan, it should read "Arcot Veerasamy" !
//
அவர் சார்ந்திருக்கும் திராவிட இயக்கத்தின் அந்நாள் தலைமை, மகாத்மா காந்தி 1942-இல் வெள்ளையருக்கு எதிராக 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தைத் தொடங்கியபோது, அயல்நாட்டவரின் ஆட்சிக்கு ஆதரவாக தீர்மானத்தை நிறைவேற்றியது ! தேசிய நலனில் என்னே ஓர் அக்கறை !!!
//
;-)))
எல்லோரையும் முட்டாளாக்கிய அறிஞர் அண்ணா தேசிய நலன் மீதான அக்கறையோடு எழுப்பிய "அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு" என்பதான முழக்கம் உணர்த்தாத இந்திய தேசிய நலனா!
Hariharan,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி !
Post a Comment